சாலியமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த கட்டடத்தை சீரமைத்து தர வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சாலியமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் அந்த மருத்துவமனையில் ரத்த அழுத்த பரிசோதனை சர்க்கரை நோய்க்கான பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை உள்ளிட்ட ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கர்ப்பிணி பெண்களும் இங்கு வந்து பரிசோதனை செய்து செல்கின்றனர்.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் உட்பட சுமார் 15 பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதேபோல் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரமும் விபத்து ஏற்படலாம் என்ற நிலை உள்ளது. இங்கு வந்து செல்பவர்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே சேதம் அடைந்த பகுதிகளை சீரமைத்து தருவதோடு மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தி விட்டு வேறு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.