சிவகங்கை மஜித் ரோடு பகுதியில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகமும், நூலக நண்பர்கள் திட்டமும் இணைந்து 57 -ஆவது தேசிய நூலக வார விழா இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட நூலகர் கே. திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். நூலகர் சூ. முத்துக்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம். துரைஆனந்த் பங்கேற்று, நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து, நூலகத்தில் புதிய உறுப்பினராக இணைந்த மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டையையும், புத்தகங்களையும் வழங்கி வாழ்த்தினார்.
விழாவில், நூல் சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், வழக்குரைஞர் அமுதன், நூலக நண்பர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான அ. ஈஸ்வரன், நூலக தன்னார்வலர் ரமணவிகாஸ் முத்து கண்ணன், மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நா. சுந்தர்ராஜன், நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சாஸ்தா சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட மைய நூலகர் கனகராஜன் நன்றி கூறினார் இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.