இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மையம் சார்பில் ‘ஆரோக்கியமான இந்தியா' என்ற தலைப்பில் உடற்பயிற்சி மற்றும் மாசு இல்லாத எதிர்காலத்தை வலியுறுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மைய உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் நாசர்கான், ரோட்டரி கிளப் ஆப் சேலம் மாவட்ட துணைத்தலைவர் ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த ஊர்வலம் அம்பேத்கர் சிலை, வின்சென்ட் வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உடற்பயிற்சி மற்றும் மாசு இல்லாத காலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.