கோ ஆப் டெக்ஸ் தமிழகத்தில் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக நெசவாளர்களின் முன்னேற்றத்திற்காக உதவிடும் வகையில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி, தஞ்சாவூர், சேலம் பட்டுப்புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளது மேலும் கோவை, மதுரை திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி, மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் ஆர்கானிக் மற்றும் களம் காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30%சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. இந்த ஆண்டு 4 கோடியே 93 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேலம் கடை வீதி பகுதியில் அமைந்துள்ள கோ ஆப் டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் 2024 ஆம் ஆண்டுக்கான 30 % தள்ளுபடியுடன் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஜவுளி ரகங்களை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கோ ஆப் டெக்ஸ் மேலாளர் கோபி மற்றும் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலைய மேலாளர் ஜமுனாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.