தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு உணவு பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கு தயார் செய்து வைத்திருந்த சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: -
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 2, 697 அங்கன்வாடி மையங்களில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட பணியாளர்கள் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களில் உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ரத்த சோகை பரவலைக் குறைக்கவும் முதல் வயது குழந்தைகளின் வளர்ச்சி குன்றியதை தடுத்திடவும், ஊட்டச்சத்து குறைவதை தடுக்கவும், குறைந்த எடைபாதிப்பை குறைத்தல் போன்ற காரணிகளை நோக்கமாக கொண்டு ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்படுகிறது.
அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் குறித்து குறுக்காய்வு செய்யப்பட்டு எடை, உயரம் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.