தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்நிலையில் சேலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 800 பணியாளர்கள் நியமனம் செய்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறுகையில், டெங்கு காய்ச்சல், வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல் ஆகும். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. இது முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி 10 நாட்களில் கொசுவாக மாறுகிறது.
டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஎஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும்பொழுது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு காய்ச்சல் பரவுகிறது. அதாவது, காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி ஆகியவை இந்த காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகள் ஆகும். எனவே, காய்ச்சல் வந்துவிட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.