சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்மணி, ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய வீட்டில் 18 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடியது பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த அப்சல்கச்சா (வயது 35), அவரது தாய் மும்தாஜ் (62), அம்மாபேட்டைபகுதியை சோர்ந்த கண்ணன் (32), கிச்சிப்பாளையம் நாராயணநகர் அலாவுதீன் பாஷா (38) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்கள் 4 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மீதமுள்ள நகை, பணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.