சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 23வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். ஆய்வு நிறைவு செய்த 288 பேருக்கும், முதுநிலை மற்றும் இளங்கலை பட்டங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ, மாணவியருக்கும் தங்கப்பதக்கத்துடன் கூடிய பட்ட சான்றிதழ்களை வழங்கினார். மொத்தம் 397 பேருக்கு ஆளுநர் ஆர். என். ரவி பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதனிடையே ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்பாக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் விக்சிட் பாரத் திட்டத்திற்கு பெரியார் பல்கலைக்கழக நிதியினை பயன்படுத்தி வருவதாகவும், பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் சனாதான கொள்கைகளை பரப்புவதாகவும் கூறி ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திராவிடர் விடுதலை கழகத்தின் இந்த போராட்டம் காரணமாக பெரியார் பல்கலைக்கழகம் அருகே ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்தனர்.