கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதியும், கடந்த 12-ந் தேதியும் என இருமுறை நிரம்பியது. அதன்பிறகு அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் மாறி, மாறி வருகிறது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்தது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 122 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு நேற்று வினாடிக்கு 8, 792 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கும் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து குறைந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 8 ஆயிரத்து 563 கனஅடியாக குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் 120 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 119.76 அடியாக குறைந்தது. அதாவது மேட்டூர் அணை நீர்மட்டம் 9 நாட்களுக்குப் பிறகு 120 அடிக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.