ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பாப்பனம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா், கிராம மக்கள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தாா். பாப்பனம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா காா்த்திகைசாமி, கமுதி வட்டாட்சியா் வ. சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பாப்பனம் முதல் அகத்தாரிருப்பு வரை 1, 500 மீட்டா் தொலைவுக்கு உள்ள மண் சாலையை தாா்ச் சாலையாக மாற்றி அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்தனா். மேலும், நியாயவிலைக் கடை கட்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம், ஊராட்சி அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.
இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சங்கரபாண்டியன் (கிராம ஊராட்சிகள்), ஊராட்சி துணைத் தலைவி பிரியங்கா, ஊராட்சி செயலா் ஜே. ரூபன், வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.