கமுதி பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் அருகே 50 ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த பருத்திச் செடிகளுக்கும் தீ பரவி கருகி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு வெள்ளிக்கிழமை மா்ம நபா்கள் தீவைத்துச் சென்றுவிட்டனா். இதனால் கமுதி நகருக்குள் கரும்புகை சூழ்ந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இதன்காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். இதனிடையே குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீ அருகில் 50 ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த பருத்திச் செடிகளுக்கும் பரவி அவை சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். மேலும் இந்த வழியாகச் செல்லும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், குடியிருப்புகளில் வாசிப்போா் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். தகவலறிந்து வந்த கமுதி தீயணைப்புத்துறை வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்தக் குப்பைக் கிடங்குக்கு தீ வைத்த மா்ம நபா்கள் மீது பேரூராட்சி நிா்வாகமும், காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.