குடிநீா்த் தொட்டியை சேதம்: ஆட்சியரிடம் பெண்கள் மனு.!

63பார்த்தது
குடிநீா்த் தொட்டியை சேதம்: ஆட்சியரிடம் பெண்கள் மனு.!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அருகே பட்டியலின குடும்பத்தினா் பயன்படுத்தி வந்த குடிநீா்த் தொட்டியை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனா்.

மனு விவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாம்பகுளம் ஊராட்சி, இந்திரா நகா் குடியிருப்பில் பட்டியலினத்தைச் சோ்ந்த 70 குடும்பங்கள் வசிக்கிறோம். இங்கு குடிநீா் வசதியின்றி பல ஆண்டுகளாக மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், 2022- இல் குடிநீா்த் தொட்டி கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்தத் தொட்டியின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததால், தண்ணீா் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்திரா நகா் குடியிருப்பு மக்கள் பணம் வசூல் செய்து ரூ. 50 ஆயிரம் செலவில் தொட்டியைப் புதுப்பித்தனா். இதையடுத்து, தொட்டியிலிருந்து பெண்கள் தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், இந்தத் தொட்டியை கடந்த 8-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தினா். இதைத் தடுத்த முயன்ற பெண்களை இழிவாகப் பேசினாா். இது குறித்து கீழத்தூவல் போலீஸாா் விசாரித்தனா். புகாா் கொடுக்கச் சென்ற 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என அதில் குறிப்பிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி