புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் லெனின் நகரை அப்புறப்படுத்த மீண்டும் பொக்லைன் இயந்திரங்களுடன் அரசு அலுவலர்கள் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்துக் கட்சியினரும், லெனின் நகர் மக்களும் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதி நீர்நிலைப் புறம்போக்கு என்பதால், அனைத்து வீடுகளையும் அப்புறப்படுத்த நீர்வளத் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்புறப்படுத்த வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் உள்ளிட்டோரின் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தினர். இதன் தொடர்ச்சியாக பொக்லைன் இயந்திரங்கள், காவல்துறையினருடன் நீர்வளத்துறையினர் வீடுகளை அகற்ற வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை தலைமையில் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருமயம் வட்டாட்சியரகத்தில் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா தலைமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மாற்று இடம் வழங்கவும், அதன்பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.