தமிழகத்தில் கோடைக்காலம் முடிவடைந்தும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு, நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தாகம் தணிக்க பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானங்களை பருக தொடங்கியுள்ளனர். தர்பூசணி, இளநீர் ஆகியவை கோடைக்காலத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
அதனால் விலையும் ஒரளவு கட்டுக்குள் இருக்கும். இப்போது தர்பூசணி சீசன் முடிந்துவிட்ட நிலையில், இளநீர் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பொன்னமராவதி பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்று வந்த இளநீர் கடந்த சில நாட்களாக ரூ. 60 வரை விற்று வருகிறது. பெரிய இளநீர் ரூ. 70 வரை விற்கப்படுகிறது. வசதி படைத்தவர்கள் இளநீர் வாங்கி பருகிச் செல்கின்றனர். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு விற்கப்படும் சர்பத், எலுமிச்சை பழச்சாறு, மோர் ஆகியவற்றை பருகி தாகத்தை தணித்துக்கொள்கின்றனர்.