
ஊட்டி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி பேருந்து நிலையம் பகுதியில் நேற்று கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஊட்டி ஜி-1 காவல் உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரன், நிஷாந்தி தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, ஒரு கிலோ கஞ்சாவும், 100 கிராம் ஹைட்ரோபோனிக் எனப்படும் ரசாயனப் பொருளும் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் காளம் பூலாவைச் சேர்ந்த அப்துல் வகாப் (34), ஊட்டி வண்டி சோலையைச் சேர்ந்த சுஜன் (35), காட்டேரி உலிக்கல் பகுதியைச் சேர்ந்த மெல்சர் பால் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.