கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், கூடலுார், ஓவேலி, ஜீன்பூல், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. அதில், பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரகம், தேயிலை தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
இதனால், அடிக்கடி யானை- மனித மோதல் ஏற்படுகிறது. பல உயிர் பலிகளும் தொடர்கிறது. இத்தகைய மோதலுக்கு, வனப்பகுதியில் யானைகளுக்கான உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதுடன், உண்ணிச் செடிகள் உட்பட பிற களைச் செடிகள் அதிகரிப்பால் புல்களின் வளர்ச்சி வனப்பகுதியில் தடைபட்டுள்ளது. இதனால், யானைகள் உணவு தேடி ஊருக்குள் வந்து, விவசாய பயிர்களை அழிப்பதுடன், மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதற்கு தீர்வு காணகளைச் செடிகள் முழுமையாக அகற்றப்பட்டு, அங்கு யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனங்களை பயிரிடும் பணியில் நேற்று முதல் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
முதல் கட்டமாக, 50 ஏக்கர் பரப்பில் களைச் செடிகள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில் மூங்கில் விதைகள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட தீமேடா வறட்சி மற்றும் வெப்பத்தை தாங்கி வளரும் தன்மை கொண்ட கொழுக்கட்டை புல், அடர்த்தியாகப் புதர்போன்று வளரும் தன்மை கொண்ட யானைப்புல் ஆகியவை பயிரிடப்படுகிறது. இதனால் யானைகள் ஊருக்குள் புகுவது தடுக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.