நாகை மாவட்டம் குத்தாலம் கிராமத்தில் செயல்படும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் இணைக்கும் நிலையத்தை முற்றுகையிட்டு குத்தாலம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குத்தாலம் கிராமத்தில் கீழத்தெருவில் வசிக்கும் தலித் மக்களுக்கு குடிநீர், கழிவறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஓஎன்ஜிசி நிறுவன நுழைவு வாயில் முன்பு பொதுமக்கள் திரண்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து குருடாயில் ஏற்றி வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுவனத்தின் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராடினர். பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போலீசாரிடம் ஒஎன்ஜிசி அதிகாரிகளை வெளியேஅழைத்து வரவேண்டும் என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நிறுவனத்தின் உள்ளே போராட்டக்காரர்கள் செல்லமுடியாத வகையில் தடுப்புகளை அமைத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.