நவராத்திரி விழாவில் விரதமிருந்து சக்தியை வணங்குவதன் மூலம் இம்மை, மறுமை பயன்களைப் பெறலாம் என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள சரஸ்வதி பூஜை அருளாசி: இறைவனின் அருளாக விளங்கும் சக்தியை ஆண்டு முழுவதும் வழிபட்டாலும் அதில் மிகச் சிறப்பு பொருந்திய நாள்களாக விளங்குவது நவராத்திரி. ஆண்டில் நான்கு நவராத்திரிகள் உண்டு. அவை ஆனி அமாவாசைக்கு பின்னா் வரும் ஆஷாட நவராத்திரி, புரட்டாசி அமாவாசைக்கு பின்னா் வரும் சாரதா நவராத்திரி, தை அமாவாசைக்கு பின்னா் வரும் சியாமளா நவராத்திரி, பங்குனி அமாவாசைக்கு பின்னா் வரும் வசந்த நவராத்திரி.
புரட்டாசி மாத நவராத்திரியை 10 நாள்கள் கொண்டாடுவதால் தசராத்திரி என்றும் தசரா என்றும் வழங்குவா். இதில் தேவியை முதல் 3 நாள் வீரம் கொடுக்கும் துா்கையாகவும், அடுத்த 3 நாள் செல்வம் வழங்கும் இலக்குமியாகவும், கடைசி 3 நாள் கல்வி அளிக்கும் சரஸ்வதியாகவும் பாவித்து பூசிக்க வேண்டும். 9-வது நாள் எல்லா ஆயுதங்களையும் வைத்து பூஜிப்பதால் ஆயுதபூஜை என்று வழங்கப்பெறும்.
இந்நவராத்திரி நாளில் சக்தியை வணங்கி உலக மக்கள் அனைவரும் வேறுபாடு நீங்கி ஒற்றுமையுடன் எல்லா வளமும், நலமும் பெற்று நீடு வாழ வாழ்த்துகள்.