மதுரை திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருந்து லாரிகள் மூலம் மண்களை திருடுவதாக லாரிகளை நீர்வளத் துறையினர் மடக்கி பிடித்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் கனிம வளம் (மண்) நெடுஞ்சாலை துறை அதிகாரி தலைமையில் திருடப்பட்டு வருவதாக நீர்வள துறையினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதிகரித்து வரும் வாகன போக்குவரத்திற்கு வசதி செய்யும் வகையில் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரைப்பகுதியில் ரூ. 41.89 கோடி மதிப்பீட்டில் 1.20 கிலோமீட்டர் தூரத்திற்கு கரையில் சாலை மற்றும் 9.5 மீட்டர் உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நீர்வளத் துறை பணி ஆய்வாளர்கள் வரத முனீஸ்வரன், செந்தில்குமார், பாசன ஆய்வாளர்கள் பாலச்சந்தர், கென்னடி ஆகியோர் திருநகர் அருகே உள்ள பாண்டியன் நகரில் மண் கடத்தி வரப்பட்ட மூன்று லாரிகளை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் வட்டாட்சியர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரிகளை நிறுத்தி வைத்தனர். வட்டாட்சியர் கவிதா லாரிகளை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று ஆவணங்களை சரி பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு சென்றார். இதுதொடர்பாக திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.