மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை உற்சவத்தையொட்டி லட்சதீபம் ஏற்றப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை உற்சவத் திருவிழாவையொட்டி, வருகிற நவ. 15-ஆம் தேதி பாலதீபம் ஏற்றப்பட்டு, மறுநாள் நவ. 16-ஆம் தேதி கார்த்திகை லட்சதீபம் ஏற்றப்பட்டு, அன்றைய தினம் சொக்கப்பன் கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோயில் ஸ்தானிக பட்டர்கள் ஆலோசனையின் பேரில் கார்த்திகை உற்சவத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கார்த்திகைத் திருவிழா நவ. 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவ. 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, டிச. 13-ஆம் தேதி கார்த்திகை அன்று கோயில் முழுவதும், லட்சதீபம் ஏற்றப்படும். மேலும் அன்றைய தினம் இரவு 7 மணிக்கு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சந்நிதி தேரடி அருகில் பூக்கடைத் தெருவிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்கின்றனர். எனவே கார்த்திகை உற்சவத்தையொட்டி உபயதங்கரதம், உபயதிருக்கல்யாணம் மற்றும் உபயவைரக்கிரீடம் ஆகிய விசேசங்கள் நடைபெறாது என அதில் குறிப்பிடப்பட்டது.