மதுரை மத்திய சிறையில் அமைந்துள்ள சிறை சந்தையில் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்களான ரெடிமேட் ஆடைகள், வேஷ்டி சட்டைகள், கைலிகள், தீபாவளி சிறப்பு இனிப்பு கார வகைகள், செக்கில் தயார் செய்யப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் சிறப்பு விற்பனையை இன்று சிறைத்துறை டிஐஜி பழனி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டார். சிறைத்துறை டிஐஜி பழனி கூறியதாவது,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறைவாசிகளின் குடும்பத்தாரும் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரும் பயன்பெறும் வகையில் ஆடைகள் மற்றும் இனிப்பு கார வகைகள் விற்பனையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி மக்கள் சிறைவாசிகளின் தயாரிப்பு பொருட்களை அதிகளவு வாங்குவதற்கான ஒரு சிறப்பு ஏற்பாட்டினை சிறைத்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் வாங்கும் வகையில் இனிப்பு வகைகள் கிலோ 350 ரூபாய்க்கும், கார வகைகள் கிலோ 240 ரூபாய்க்கும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் புரிபவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்குவதற்கு வசதியாக ஒன்பது வகையான கார மற்றும் இனிப்பு வகைகள் அடங்கிய ஒரு இனிப்பு பெட்டகத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் விலை ரூபாய் 499 மட்டுமே.
இந்த தீபாவளி ஒரு சீர்திருத்த தீபாவளியாக அமைய பொதுமக்கள் தங்களது ஆதரவை தரும்படி கேட்டுக் கொள்வதாக கூறினார்.