மூன்றுமாவடி பகுதியில் சிக்னல் அமைக்ககோரி வழக்கு

58பார்த்தது
மதுரை கே. புதூரை சேர்ந்த சந்திரபோஸ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, அழகர்கோவில் சாலையில் முக்கிய சந்திப்பாக மூன்றுமாவடி நான்கு முனை சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதியில் போதிய டிராபிக் சிக்னல் அமைக்காததால், டூவீலரில் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியவில்லை. அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. எனவே மூன்றுமாவடி சந்திப்பில் போக்குவரத்தை சரிசெய்யும் வகையில் சிக்னல் அமைத்து போக்குவரத்தை சீர்செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ''மனுதாரர் கூறிய இடத்திற்கு அருகே 150 மீட்டர் தொலைவில் போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. மனுதாரர் தெரிவிக்கும் இடத்தில் சிக்னல் அமைத்தால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். நீண்டதூரம் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே, மூன்றுமாவடி பகுதியில் சிக்னல் தேவையில்லை. அங்கு போக்குவரத்தை சரிசெய்ய போதிய காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்'' என கூறப்பட்டது. இதையடுத்து, மனுவை பரிசீலனை செய்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்த நீதிபதிகள், விசாரணையை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி