கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலம் மாத்தூர் தொட்டி பாலம். காமராஜர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த தொட்டி பாலம் ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும் நீளமான தொட்டி பாலமாகும். இதை பார்வையிட தினம் சுற்றுலா பயணிகள் ஏராளம் பேர் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மாத்தூர் தொட்டி பாலத்துக்கு சுற்றுலா வந்த மாணவி ஒருவர் கடந்த இரண்டு மாதம் முன்பு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த காரணங்காட்டி மாவட்ட ஆட்சியர் பாலத்தின் மேல் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு தடை விதித்து பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் சுமார் 10 மீட்டர் தூரத்தில் பூட்டு போட உத்தரவிட்டார். பொதுமக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் பாலத்தின் பல்வேறு பகுதிகள் கைப்பிடி சுவர்கள் பழுதடைந்து உள்ள நிலையில் நேற்று மதியம் 12: 00 மணியளவில் திடீரென்று அங்கு வந்த திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கேட்டை பூட்டு போட்டனர். இதனால் நேற்று விடுமுறை நாளில் தொட்டி பாலத்தை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதற்கு இடையில் இந்த பகுதியின் பூட்டை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மாலையில் மீண்டும் தொட்டிப்பாலம் திறக்கப்பட்டது.