தைப்பூச திருநாளையொட்டி திருப்போரூர் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்போரூர் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. தைப்பூச தினமான இன்று சரவண பொய்கையில் பக்தர்கள் நீராடி முடிகாணிக்கை செலுத்தியும், பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் துலாபாரம் செலுத்தி தங்களது பிரார்த்தனைகளை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் திருப்போரூர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.