வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ், நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாரம்தோறும் சுகாதாரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று (செப் 28) நடந்த முகாமில் 'மக்களை தேடி மருந்தகம்' ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. அதில், டெங்கு, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை, தொழுநோய், காசநோய், கர்ப்பிணியர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டம் போன்றவற்றுக்கு, தனித்தனியாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து, வட்டார மருத்துவர் ராஜேஷ் கூறியதாவது:
நந்திவரம் அரசு மருத்துவமனையில், வாரம்தோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தோர் பயன்பெறுகின்றனர்.
இங்கு, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மருத்துவ சேவை குறித்து, ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, குஜராத் மாநில சுகாதார துறையை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்துள்ளனர்.
இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணிகளை எவ்வாறு மேற்கொள்கின்றனர் என, அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், இங்கு தாய் - சேய் நல வார்டில், கர்ப்பிணியர், தாய்மார்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக, செயல்படுத்தப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.
இங்கு நடைபெறும் சிகிச்சை முறைகளை போல், குஜராத் மாநிலத்திலும் செயல்படுத்த இருப்பதாக கூறினர்.