செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், கடந்த 2009- 10ம் ஆண்டு, அரசு நிலத்தில் ஆட்டோ நகர் உருவாக்கப்பட்டு, சென்னை புதுப்பேட்டை பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த மனைகளுக்கு சென்று வர, தார் சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், மனைகளில் குடியேற யாரும் வராததால், சாலை பயன்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சில மாதங்களாக, இந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தார் சாலைகளை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக பெயர்த்து எடுத்து, ஜல்லி மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அதிகாலை, இந்த பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதைக் கண்ட கிராம மக்கள், பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை மடக்கி பிடிக்க முயன்றனர்.
லாரி தப்பிச் சென்ற நிலையில், பொக்லைன் இயந்திரத்தை மக்கள் சிறைபிடித்து, காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார் மற்றும் ஆப்பூர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம், பொக்லைன் இயந்திரத்தை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.