காஞ்சிபுரம் மாவட்டத்தில் 79 ஓட்டுச்சாவடிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 265 ஓட்டுச்சாவடிகளிலும், 50 சதவீதத்திற்கும் குறைவாக, கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இந்த ஓட்டுச்சாவடி அமைந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழிப்புணர்வு பணிகளில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க சமூக வலைதளம், பேரணி, மாணவர்கள், இசை, பாடல், உறுதிமொழி என, பல வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நகர்ப்புறங்களில் இருப்பினும், பல்வேறு தொகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைவாகவே பதிவாகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில் குறைவாக ஓட்டுப்பதிவு நடந்திருப்பது, 2021 சட்டசபை தேர்தலில் கணக்கெடுக்கப்பட்ட புள்ளிவிபரப்படி தெரியவந்தது.
இதையடுத்து, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், குறைவாக ஓட்டு சதவீதம் பதிவான ஓட்டுச்சாவடிகள் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அப்பகுதிகளில் விழிப்புணர்வு நடத்தவும், அதற்கான காரணத்தை அறியவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.