கூடுவாஞ்சேரியில் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது

55பார்த்தது
கூடுவாஞ்சேரியில் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் மீன் மார்க்கெட் அருகில், காய்கறி கடை நடத்தி வருபவர் ராமலிங்கம், 44. அவரின் மனைவி தமிழ்ச்செல்வி, 40. வியாபார தேவைக்காக, புது பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பாபு, 56, என்பவரிடம், ராமலிங்கம் தண்டலுக்கு பணம் வாங்கியுள்ளார். தினமும் இரவு 8: 00 மணிக்கு மேல், பணத்தை பெறுவதற்காக, பாபு கடைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, வியாபாரம் சரியாக இல்லாததால், ராமலிங்கம் தண்டல் பணம் செலுத்தவில்லை. அதனால், நேற்று முன்தினம் இரவு பணம் பெற வந்த போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த பாபு, கடையில் காய்கறி நறுக்குவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து, ராமலிங்கத்தின் கழுத்தில் குத்தியுள்ளார். ராமலிங்கத்தின் மனைவி தமிழ்ச்செல்வி தடுத்ததால், காயங்களுடன் அவர் தப்பினார். தொடர்ந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட ராமலிங்கம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய பாபுவை தேடி வந்தனர். தொடர்ந்து, தலைமறைவான பாபு உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்று, அவரை கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி