செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட ஜி.எஸ்.டி. சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன. குறிப்பாக இந்த பகுதியில் முறையான வடிகால்வாய் அமைக்கப்படாததால் சாலையோரத்தில் பெருக்கெடுத்து, துர்நாற்றத்துடன் சாக்கடையாக, சாலையில் வாய்க்கால் போல் ஓடுகிறது.
இதன் அருகில் வீடுகள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. இங்கு தினமும் அதிகமானவர் நடந்து செல்கின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையில் பெருக்கெடுத்து, ஓடும் கழிவுநீரில் மிதித்து செல்லும் அவலநிலை உள்ளது. துர்நாற்றத்துடன் செல்லும் கழிவுநீரால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்க்கால்வாயை சீரமைத்து, முறையான கால்வாய் அமைத்து அதில் சீராக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.