செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல் உள்ளிட்ட, 15 பாடப்பிரிவுகள் மற்றும் முதுநிலை, ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு, 2, 750 மாணவியர் உட்பட, 4, 200 பேர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்லுாரி வகுப்பறைகளில், இட நெருக்கடியுடன் மாணவர்கள் படித்து வருவதாகவும், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடங்களில் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்கள் அதிகமாக படித்து வருகின்றனர். இதனால், கூடுதலாக 30 வகுப்பறைகள், கழிப்பறைகள், கலையரங்கம், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதரக்கோரி, அரசுக்கு கல்லுாரி நிர்வாகம் கருத்துரு அனுப்பி உள்ளது.
அதுமட்டும் இன்றி, செங்கல்பட்டு தி. மு. க. , - எம். எல். ஏ. , வரலட்சுமி, காஞ்சிபுரம் தி. மு. க. , - எம். பி. , செல்வம் ஆகியோரிடம், தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், வகுப்பறைகள் கட்டி நிதி உதவி வழங்கக்கோரி, கல்லுாரி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
எனவே, மாணவர்கள் நலன்கருதி, கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்ய, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.