காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று காலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 253 பயனாளிகளுக்கு, 8. 85 கோடி ரூபாய் மதிப்பில், பணி ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் அனாமிகா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, அமைச்சர் அன்பரசன் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர், புத்தகப்பை மற்றும் எழுது பொருட்களை வழங்கினர்.
அதேபோல், திருப்போரூரில் நடந்த நிகழ்ச்சியில், 466 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திருப்போரூர் வி. சி. , - எம். எல். ஏ. , பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.