காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, 1வது வார்டு, ராமாபுரம் பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 120 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியில் ஏராளமான விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து, பிளாஸ்டிக் மற்றும் ஸ்கிராப் உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் ராமாபுரம் ஏரியில் கொட்டி வருகின்றனர். இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. மேலும், ஏரி நீரை பருகும் கால்நடைகள் நோய் வாய்படும் அபாயம் உள்ளது.
எனவே, அத்துமீறி ஏரியில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுத்து, நீர்நிலைகளை பாதுகாக்க, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.