புலிப்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதில் முறைகேடு என கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் ஆண்டுக்கு 100 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புலிப்பாக்கம் ஊராட்சியில் முறையாக 100-நாள் வேலை வழங்குவதில்லை எனவும், இதில் தலைவருக்கு வேண்டியவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளருக்கு வேண்டியவர்கள் என அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நூறுநாள் வேலை வழங்குவதாகவும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்காவிட்டால் சம்பளம் தர முடியாது என மறுப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சிமன்ற தலைவர் முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் மக்கள் கலைந்து சென்றனர்.