சின்னசேலம்: அறுவடை இயந்திரங்கள் ரயிலில் அனுப்பி வைப்பு
சின்னசேலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு 110 நெல் அறுவடை இயந்திரங்கள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் நெல் அறுவடை பணிகள் அதிகளவில் நடக்கிறது. நெல் அறுவடை பணிகளுக்கும், வைக்கோல் போர் கட்டுவதற்கும் தேவையான இயந்திரங்கள் அங்கு இல்லாததால் சின்னசேலத்தில் இருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து, தமிழ்நாடு நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் சங்க அலுவலக மேலாளர் சக்திவேல் கூறுகையில், சின்னசேலத்தில் உள்ள தமிழ்நாடு நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் சங்கம் மூலம் கர்நாடகா மாநிலம் சூரத்கல் பகுதிக்கு 110 நெல் அறுவடை இயந்திரங்கள் ரயில் மூலம் அனுப்பப்படுகிறது. அங்கு இந்த இயந்திரஙகளின் தேவை அதிகம் உள்ளதால், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலுார், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 110 நெல் அறுவடை இயந்தரங்கள் சின்னசேலத்திற்கு கொண்டு வரப்பட்டன. இங்கிருந்து தென்னக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகளின் உதவியுடன், அதற்கான தனி ரயில்கள் மூலம் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு நெல் அறுவடை மற்றும் வைக்கோல் போர் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும். மேலும் இன்னும் 2 மாதங்களுக்கு அந்த மாநிலத்திற்குள் இந்த இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.