தீபாவளி விடுமுறை நிறைவடைந்தை தொடர்ந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
கடந்த 31ம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்த பண்டிகையொட்டி நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால், வெளியூர்களில் பணியாற்றி வந்தவர்கள், கல்வி பயில சென்றவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டனர். இதேபோல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் ஈரோட்டிற்கு வருகை புரிந்து தீபாவளி பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களை மகிழ்ச்சியாக களித்தனர். இதனையடுத்து இன்று விடுமுறை தினங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வெளியூர்களுக்கு புறப்பட தயாரான பொதுமக்கள், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது, அங்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் எதுவும் கிடைக்காத காரணத்தால், காலியான பேருந்துகளை தேடி மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், கிடைத்த பேருந்துகளில் முண்டியத்து ஏறி, இருக்கைகளை பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோல ஒரு சில ரேக்குகளில் பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து பேருந்துகளில் ஏறிச்சென்றனர்.