திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டியில் லக்னாம்பாறை என்ற பாறை குளம் உள்ளது. இங்கு தட்டாரப்பட்டி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்காக ஊராட்சி வாகனம் வந்தது. அப்பொழுது அங்கு இருந்த மூன்று இளைஞர்கள் வாகனத்தை தடுத்து தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் மூன்று இளைஞர்களும் தூய்மை பணியாளர்களுக்கு சூப்பர்வைசராக இருக்கும் இளம் பெண்ணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்து கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள் பொங்கி எழுந்து மூன்று இளைஞர்களிடமும் குடிபோதையில் இருக்கும் நீங்கள் வயசு பெண்ணிடம் அருகே நின்று பேசக்கூடாது தள்ளி நின்று பேசுங்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த வேடசந்தூர் சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் தலைமையில் போலீசாரும், திமுக நிர்வாகிகள் கவிதா முருகன், மருதபிள்ளை, முன்னாள் தட்டாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துவேல் ஆகியோர் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தூய்மை பணியாளர்கள் சூப்பர்வைசர் வேடசந்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.