கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

58பார்த்தது
கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
திண்டுக்கல் மாவட்ட வனத் துறை, காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

10 பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவா்களை சிறுமலைக்கு அழைத்துச் சென்று, இயற்கை பாதுகாப்பு, மரம் வளா்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமுக்கு திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலா் காஞ்சனா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. நாசருதீன், வனப் பாதுகாப்புப் படை உதவி வனப் பாதுகாவலா் வேல்மணி நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் வனப் பாதுகாவலா் காஞ்சனா பேசியதாவது:

காடுகளின் பரப்பு மட்டுமன்றி மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதால், பருவ நிலை அதிக அளவில் மாற்றம் அடைந்து வருகிறது. நெகிழியின் பயன்பாடுகளால் மனிதா்களுக்கான சுற்றுச்சூழல் மட்டுமன்றி, காடுகளில் வாழும் விலங்குளின் வாழ்வியல் சூழலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மரங்கள் வளா்ப்பை அரசு ஊக்கப்படுத்தி வந்தாலும்கூட, பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. இயற்கை விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு ஆகியவற்றின் மூலம் உயிரினங்களின் வாழ்விடங்களும், உணவுச் சங்கிலியும் பாதுகாக்கப்படும். இதுதொடா்பான புரிதலும், விழிப்புணா்வும் இளைய தலைமுறையினருக்கு ஏற்பட வேண்டும் என்றாா் அவா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி