திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில் வசிப்பவர் துரைசாமி மனைவி மூக்காயி (வயது 106). இவரது கணவர் விவசாய வேலை செய்து வந்துள்ளார். அவர் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மூக்காயி என்பவருக்கு 5 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் இருந்தனர். 3 மகன்கள் இறந்து விட்டனர். மகன், மகள்கள் வழியாக 27 பேரன் பேத்திகளும், 33 கொள்ளு பேரன் பேத்திகளும், ஐந்தாவது தலைமுறை வாரிசுகளாக 18 எள்ளு பேரன் பேத்திகளுமாக மொத்தம் 82 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
தமது 78 ஆவது வயதில் கணவரை இழந்த இவர் தினசரி உணவில் கீரை வகைகள், நாட்டு சுண்டைக்காய், பச்சை காய்கறிகள் உள்ளிட்டவற்றை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். வயது முதிர்வின் காரணமாக சிறிதளவு காது கேட்கும் குறைபாடு இருந்த போதிலும் நல்ல கண் பார்வை உடையவராக திகழ்ந்து வருகிறார்.
பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த மூதாட்டியின் மகன் மகள்கள் பேரன் பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் எள்ளு பேரன் பேத்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மூதாட்டிக்கு ஊட்டி மகிழ்ந்தனர். பின்னர் மூதாட்டியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
ஐந்து தலைமுறைகள் கண்ட மூதாட்டியின் பிறந்தநாளை தாங்கள் ஒரு திருமண விழா போல் கொண்டாடுவதாக பேரன் பேத்திகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.