இன்று தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர். முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரசியலமைப்புச் சட்டத்தை நாடு ஏற்றுக் கொண்ட இந்த ஜனவரி 26 ஆம் தேதி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 18 வது மாநில மாநாடு தருமபுரியில் தொடங்குகிறது. இதற்குக் காரணம் அரசியலமைப்புக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. ஆர் எஸ் எஸ்-இன் அரசியல் பிரிவான பிஜேபி, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை தொட்டு வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி, அதை நடைமுறையில் பின்பற்ற வில்லை. மாறாக மனுதர்ம ஆட்சியை முன்வைத்து செயல்படுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல், தேசிய கல்விக் கொள்கை சட்டம் போன்றவை அதன் வெளிப்பாடுகள். இறுதியாக ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற நிலையை ஏற்படுத்தி விடுவார்கள்.
சர்வாதிகார நிலையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. வேலையின்மை என்ற பிரச்சினை நாட்டை கொந்தளிக்க வைக்க உள்ளது. வேங்கை வயல் விவகாரம் தற்பொழுது 3 பேர் பெயரை காவல்துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள விசிக, சிபிஎம் கட்சி தலைவர்களும் சிபிஐ விசாரணை வேண்டுமென தெரிவித்திருக்கிறார்கள்.