தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் 100டன் அளவிற்கு தக்காளி விற்பனைக்காக குவிக்கப் படுகிறது. பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஹள்ளி, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளியை கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால், சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. இங்கிருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது.
பாலக்கோடு மார்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்ததால், இன்று கிலோ 18க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 270க்கு விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் கிலோ 50 முதல் 80 வரையிலும் விற்பனை யானது தக்காளி தற்போது கொள்முதல் விலை 18 ரூபாயாகவும், விற்பனை விலை 25 ரூபாய் வரையிலும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டமடைந்துள்ளனர். எனவே, உழவர் சந்தையை போல், தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.