தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில் சிக்குபவர்கள், உயர் மாடி கட்டிடங்களில் மாட்டிக் கொண்டு கீழே வர முடியாமல் தவிப்பவர்கள் ஆகியோரை மீட்பது குறித்து அடிக்கடி மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கோவை தெற்கு தீயணைப்பு துறை சார்பில் மாவட்ட அலுவலர் புலுகாண்டி மற்றும் மாவட்ட துணை அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் உயர் மாடி கட்டிடத்தில் ஏற்படும் விபத்தின் போது சிக்கி தவிப்பவர்களை 'ஸ்கை லிப்ட்' என்ற ராட்சத இயந்திரத்தின் உதவியுடன் மீட்டு கீழே கொண்டுவந்து கொண்டு வருவது குறித்து ஒத்திகை நடத்தினர். இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், '' பின்லாந்தில் இருந்து இந்த இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் உதவியுடன் சுமார் 54 மீட்டர், அதாவது 160 அடி உயரத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக கீழே அழைத்து வர முடியும்''என்றனர்.