எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை பள்ளிகளில் முதன் முறையாக சர்வதேச டெடெக்ஸ் நிகழ்வு

895பார்த்தது
எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை பள்ளிகளில் முதன் முறையாக சர்வதேச டெடெக்ஸ் நிகழ்வு

கோவை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள், எஸ்எஸ்விஎம் வேர்ல்டு ஸ்கூல் சார்பில் கோவை பள்ளிகளில் முதன் முறையாக சர்வதேச நிகழ்வான டெடெக்ஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை எஸ்எஸ்விஎம் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், நிர்வாகச் செயலாளர் மோகன்தாஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் நிதின் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

டெடெக்ஸர் மற்றும் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியுமான ஸ்ரீனிவாசன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்து “ஒரு நல்ல நெருக்கடியை வீணாக்காதே" என்ற தலைப்பில் உரையை நிகழ்த்தினார்.

அவர் பேசும் போது: - தற்போது ஃபாரின் சர்வீஸ்க்குச் செல்பவர்கள் குறைந்து விட்டனர். அயல் நாட்டுத் தூதுவர், அலுவலகப் பணிகளிலும் சொந்த நாட்டுக்கு சேவை புரிய முடியும் எனும் நம்பிக்கை வலுப்படவேண்டும். அயல் நாட்டு விவகாரங்களில் மிகுந்த தகவல் அறிவு கொள்பவர்களே, ஃபாரின் சர்வீஸைத் தேர்வு கொள்ள முடியும். நாடுகளுக்கிடையில் நெருக்கடி என்பது மனித குலத்துக்கான சவால் தான். நெருக்கடிகள் வரும்போது , அவற்றை வளர்ச்சிக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் இதுவரை வரலாற்றில் நடந்தும் இருக்கிறது.

இரண்டாம் உலகப் போர், சோவியத் கூட்டமைப்பு நாடுகளின் துண்டாடல், 2001-ல் தொடங்கி பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த பொருளாதார முடக்கம், அணு ஆயுதங்களின் ஆபத்து, அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தாக்குதல், சமீபத்தில் கோவிட் தீங்குப் பரவல் எல்லாமுமே உலகுக்கு நேர்ந்த கடும் நெருக்கடிகள் தான். தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையே வல்லாதிக்கப் போர். இந்த நெருக்கடிகள் எல்லாமே, ஒட்டு மொத்த மனித குலத்துக்கான சவாலாக அமைந்து விட்ட போதிலும், இவற்றிலிருந்தே வளர்ச்சிக்கான வாய்ப்பையும் பெறமுடிகிறது. இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது கூட, உலக நலன் பாதுகாப்பின் பொருட்டுத்தான். மனிதனின் மனச்சாட்சியும், நம்பிக்கையுமே இதனைச் சாதிக்கும் என ஐ. நா. கூறுகிறது.

உலக சமாதானத்திற்கான வலுவான முயற்சியில் ஐ. நா. ஈடுபடுகிறது. வளர்ந்த நாடுகள் என்பவை, வளரும் நாடுகளின் வளர்ச்சி மற்றும் அரசியல் நல நோக்கிலும், லாபம் கருதாது உதவ வேண்டும். நாடுகளின் தனிப்பட்ட நலன்களை விட, ஒட்டு மொத்த மானுட இனத்தின் ஒற்றுமையும், பாதுகாப்பும், நலனுமே முக்கியம் - என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்வில், கௌரவ விருந்தினராக ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் மற்றும் சுவாமி லலிதானந்தா ஆகியோர் முறையே முன்னுதாரண மாற்றம் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி குறித்து உரைகளை ஆற்றினர்.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், அறிவியல், புதுமை பற்றிய வியக்கத்தக்க தலைப்புகளில் உரையாடினர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :