கோவை உக்கடம் மேம்பாலப் பணிகளுக்காக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு சிஎம்சி காலனியில் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்குவதில் மோசடி நடைபெறுவதாக குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்கடம் பகுதியில் மேம்பாலப் பணிகள் தொடங்கியபோது, அங்கு வசித்து வந்த குடும்பங்களை மாநகராட்சி நிர்வாகம் காலி செய்தது. அப்போது, அவர்களுக்கு சிஎம்சி காலனி பகுதியில் புதிதாக கட்டப்படும் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. சில குடும்பங்களுக்கு தற்காலிகமாக புல்லுக்காடு பகுதியில் தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டன. எனினும், அவை போதுமானதாக இல்லாததால் பலர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிஎம்சி காலனியில் சுமார் 200 வீடுகளைக் கொண்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டும், 16 குடும்பங்களுக்கு இதுவரை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் படத்தோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.