தமிழக இளைஞர்களின் நலனை கருதி, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் எடுக்க வேண்டும் என, தமிழக பா. ஜ. , வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலையும், ஊடுருவலையும் தடுக்க வேண்டிய காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளில், 850 பேர், கடத்துபவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வெளியாகியுள்ள தகவல், மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. தங்கள் நிர்வாகத்தில் உள்ள அரசு அதிகாரிகளே போதைப்பொருள் கடத்தலுக்கு துணை போவதை, இத்தனை ஆண்டுகளாக கண்காணிக்க தவறியது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி. மு. க. , அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமும், போதையால் ஏற்படும் வன்முறை குற்றங்களும் அதிகரித்து வருவது நிஜம். குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வரை பெரும்பாலான இளைஞர்கள் கூட்டம், போதையின் கோரப்பிடியில் சிக்கி, தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விட்டனர் என்பதுதான் திராவிட மாடல் அரசின் கோர முகம்.
இளைஞர்களின் நலனைக் கருதி, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.