
அண்ணா சாலையில் பைக் ரேஸ்: 14 பேர் கைது
அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் 14 பேர் பிடிபட்டனர். அவர்களது பெற்றோர் முன்னிலையில் போலீஸார் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இளைஞர்கள் சிலர் அவ்வப்போது முக்கிய சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களை சென்னை போக்குவரத்து போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்வதோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால், ரேஸ்கள் வெகுவாக குறைந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அதிவேகமாக சென்ற அவர்களின் வாகனத்தால் பிற வாகன ஓட்டிகள் பதற்றமும், அச்சமும் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் என 14 பேரை அடையாளம் கண்ட போக்குவரத்து போலீஸார் அவர்களை கைது செய்ததோடு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.