
சென்னை: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது
சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மூதாட்டியின் மகன் நேற்று காலை தனது தாயை பார்க்க வீட்டிற்கு வந்த போது, அவரது தாய் படுக்கை அறையில் உடலில் ரத்த காயங்களுடன் ஆடைகள் கலைந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் உடனே தனது தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்திய போது, மூதாட்டி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த போதை ஆசாமியான நாகராஜ் என்பவர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, மூதாட்டியை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மூதாட்டிக்கு உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாகராஜ் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.