பொன்விழாவை முன்னிட்டு ரூ. 10. 85 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சென்னை அண்ணா மேம்பாலத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தின் முதல் சாலை மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கடந்த 1969-ல் முதல்வராக மு. கருணாநிதி பொறுப்பேற்ற பின் திட்டமிடப்பட்டு, வடிவமைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய மேம்பாலமாகும். கடந்த 1970-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை சாலை, ஜி. என். ஷெட்டி சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அந்த நெரிசலை நீக்கி அப்பகுதியில் சுகமான சாலைப் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது.
அப்போது ரூ. 66 லட்சம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட பாலத்தை, 1973 ஜூலை 1-ம் தேதி கருணாநிதி திறந்து வைத்தார். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சாலை சந்திப்பில் முதன் முதலாக கட்டப்பட்ட மேம்பாலம் இது. ஜெமினி ஸ்டுடியோ அப்பகுதியில் அமைந்திருந்ததையொட்டி அப்பாலத்தைக் குறிப்பிடும்போது, ஜெமினி மேம்பாலம் என்று கூறப்பட்டது. ஆனால், அன்றைய நிலையில் நாட்டிலேயே 3வது பெரிய மேம்பாலமான அதற்கு அண்ணா மேம்பாலம் என கருணாநிதி பெயர் சூட்டினார்.