எழும்பூர் - Egmore

பணிநிரந்தம்: பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

பணிநிரந்தம்: பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

பணிநிரந்தம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் இன்று(செப்.12) சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ. 10, 000 மாத சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 400-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை
திருவண்ணாமலை கோயில் கோபுரம் முன் வணிக வளாகம்: ஐகோர்ட் ஆணை
Sep 12, 2024, 16:09 IST/சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

திருவண்ணாமலை கோயில் கோபுரம் முன் வணிக வளாகம்: ஐகோர்ட் ஆணை

Sep 12, 2024, 16:09 IST
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பு ரூ. 6 கோடி செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை அனுமதியளித்து கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் டி. ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று(செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வளாகம் கட்டுமானம் தொடர்பான வரைபடங்களை பார்வையிட்ட நீதிபதிகள், கோயில் முன்பு திறந்த வெளியில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வணிக வளாகம் கட்டுவது அவசியம் தானா? என கேள்வி எழுப்பினர். மேலும், ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என்று விளக்கம் அளிக்கும்படி அறநிலைய துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.