இந்த ஆண்டு தமிழகத்திலும், விரும்புகிற இதர மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகள் அதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநிலங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள் அதில் இணைவதற்கும், தங்கள் மாநிலத்தில் தேவையில்லை என்று விலக நினைப்பவர்கள் விலகிக் கொள்வதற்குமான உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இத்தகைய கொள்கை ரீதியான பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடுகள் குறித்த ஏராளமான புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
மாநில அரசுகளே மாணவர் சேர்க்கைக்காக வழிமுறைகளை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து முறையான விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். இந்த குளறுபடிகளால் மாணவர்கள் பாதிக்கப்படா வண்ணம் தவறுகள் சரி செய்யப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.