தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் உடல்நலக் குறைவால் நேற்று(செப்.10) காலமானார். அவரது உடல், தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்(76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 3-ம் தேதி அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்குச் சென்றது. மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் த. வெள்ளையன் காலமானார்.
அதைத் தொடர்ந்து அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள இல்லத்திலும் பெரம்பூர் வியாபாரிகள் சங்க கட்டிடத்திலும் வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் த. வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் சென்னையில் இருந்து அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, நாளை பகல் 4 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.